ஆப்நகரம்

சென்னை மின்சார ரயில் சேவை: எப்போது தொடங்கும் தெரியுமா?

மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 18 Sep 2020, 11:15 am
கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு சுமார் ஆறு மாதங்களாகியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai local train


கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டாலும் பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படாமல் இருந்த நிலையில் மக்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தனர்.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்திலிருந்து பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்க அனுமதியளிக்கப்பட்டது. சிறப்பு ரயில்களும் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தடங்களில் இயக்கப்படுகின்றன.

பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில்களும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.

சென்னை மக்கள் நகரின் மற்ற பகுதிகளுக்கு சென்று வர அதிகம் நம்பியிருப்பது மின்சார ரயில்களைத் தான். தினமும் லட்சக்கணக்கான மக்கள் அதில் பயணம் மேற்கொண்டு வந்தனர். சென்னையில் பல்வேறு பகுதிகளை இணைப்பதுடன் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ ரயில்களைவிடவும் குறைவான கட்டணத்தில் இயக்கப்படுவதால் மக்கள் இதில் சென்று வர ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் கடந்த ஆறு மாத காலமாக மின்சார ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் மின்சார ரயில்களை நம்பி சிறு சிறு வியாபாரம் செய்பவர்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும் அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும்பாலும் மின்சார ரயில்களையே தேர்வு செய்துவந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த மின்சார ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டம்: சசிகலா விடுதலை செய்தி தாக்கம்?

மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடாத நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மும்பையில் அத்தியாவசியப் பணிகளுக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மின்சார ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். மாநிலங்கள் கேட்டுக்கொண்டால் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இப்போது இது தொடர்பான பேச்சு அதிகரித்துள்ள நிலையில் இந்த மாத இறுதியில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி