ஆப்நகரம்

சமூக இடைவெளியுடன் கார் பயணம்... கலக்கும் கோவை ஓட்டுநர்

மைக்கா ஷீட் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் தரும் கோவையைச் சேர்ந்த கார் ஓட்டுனரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Samayam Tamil 15 May 2020, 10:51 am
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓட்டுனர்களும் பயணிகளும் தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள கோவையில் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil காருக்காக தயாரிக்கப்பட்ட மைக்கா கவர்


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல இந்த தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தநிலையில் கடந்த மே 9 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது கொண்டுவரப்பட்ட தளர்வுகளின் படி 34 வகையான கடைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகிறது. அதேபோல வரும் 17ஆம் தேதி முதல் புதிய நிபந்தனைகள் அரசால் அறிவிக்க உள்ளதால் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ளவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் புது முயற்சிகளை கையாள துவங்கியுள்ளனர்.

இப்படி கோவையை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் அமர்நாத் தனது காரில் வரும் வாடிக்கையாளர்களால் தனக்கு கொரோனா தொற்று ஏற்படாமல்
இருக்கவும், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பை கையாண்டுள்ளார். தனது கார் கட்டமைப்புப் பணிகளை (இண்ட்டீரியல்) மேற்கொள்ளும் பிலால் என்பவரது உதவியுடன் மைக்கா கவர்களைக் காரின் உட்பகுதியில் பயன்படுத்தி காரை மாற்றியுள்ளார்.

இது குறித்து இந்தப் புதுமையான வடிவமைப்புள்ள காரின் ஒட்டுநரான அமர்நாத் கூறும்போது, “ மைக்கா கவர்களை பயன்படுத்தி கொரோனா கேபின் கேன்வாஷ்களை கார் இன்டிரியர் பணி மேற்கொள்ளும் நபரை பயன்படுத்தி தயாரித்துள்ளோம். அதேபோல மைக்கா கவர் உதவியுடன் ஒரு தனி கம்பார்ட்மென்டை உருவாக்கி உள்ளோம். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அமரும் பகுதி மற்றும் ஓட்டுநருக்கான பகுதி இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. இது ஓட்டுநர்களுக்கும், பயணிப்பவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த வடிவமைப்பைச் செய்த கார் இன்டீரியல் தயாரிப்பாளர் பிலால் இதுகுறித்து கூறும்போது, “இந்த புது முயற்சியை தயாரித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் பயணம் செய்ய இந்த புதிய முறை உதவுகிறது.




கேரளாவைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் முதன் முறையாக இந்த தயாரிப்பு ஊடகங்கள் வாயிலாக வெளி கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனைத் தைரியமாக பயன்படுத்தலாம் என்றும்” நம்பிக்கை தெரிவித்தார்.

வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள கொண்டுவரப்படும் புதிய முயற்சிகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அடுத்த செய்தி