ஆப்நகரம்

கோயமுத்தூரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்; நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து பல்வேறு அதிா்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு கல்லூரிக்கு தனியாக அனுப்பவும் வெளியே நடமாடவும் பயம் கொண்டுள்ளனர்.

Samayam Tamil 7 Apr 2019, 1:31 pm
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து பல்வேறு அதிா்ச்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil sexual harrasment


கடந்த மாதம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் கொடூர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் கோவை துடியலூர் அருகே, கடந்த திங்கள் கிழமை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமியின் பெற்றோர் சந்தேகப்பட்ட நான்கு பேர் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குறிப்பாக, சிறுமியின் வீட்டுக்கு மிக அருகில் வசித்து வந்த விஜயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கௌதம், சதீஸ், வசந்த், சந்தோஷ், துரைராஜ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதில், சந்தோஷ் என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறியுள்ளனர். சந்தோஷ்குமார் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தாவின் வீடு, சிறுமியின் வீட்டுக்கு அருகில் இருக்கிறது. அங்கு அவர் அடிக்கடி வந்து செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஆறு நாள்களுக்குப் பிறகு இந்த வழக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று கோவை தனியாா் கல்லூாியில் பயின்று வந்த 20 வயது மாணவி கடந்த 5ம் தேதி காலை கல்லூாி சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடா்ந்து அவரை காணவில்லை என்று அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் இளம் பெண் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல் துறையினா், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூாி மாணவி தான் கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பதை காவல் துறையினா் உறுதி செய்தனா்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் இவ்வாறு யுவதிகள், சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்று குற்றவாளிகள் பிடிபட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு கல்லூரிக்கு தனியாக அனுப்பவும் வெளியே நடமாடவும் பயம் கொண்டுள்ளனர். இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் குறைய, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிப்பதே சிறந்த வழி எனப்படுகிறது.

அடுத்த செய்தி