ஆப்நகரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு சிறப்பான சலுகை, 7 பேர் சஸ்பெண்ட்..!

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிகளுக்கு சலுகை அளித்ததாக ஏழு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Oct 2021, 4:24 pm
2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சிலர் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி நாட்டையே உலுக்கியதைடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
Samayam Tamil pollachi case convicts


இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீது அதே ஆண்டான 2019 மே மாதம் சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ தொடர் விசாரணையில், அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் ஹேரேன் பால், பாபு மற்றும் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் ஆகிய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்தது.

தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அருண்குமார் என்ற இளைஞரை இந்த வழக்கு சம்மந்தமாக சிபிஐ கைது செய்தது. இதுவரை 8 இளம்பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், 64 சாட்சியங்கள், 71 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்ப்படுத்தப்பட்டனர். கதவடைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 28ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே, கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், விடுபட்ட சில நகல்களான பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தில் நகல்கள் வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் சேலம் மத்திய சிறையிலும், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 4 பேரை கோபி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்த விசாரணையின்போது, 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி கோவை மகளிர் சிறையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்திவிட்டு வந்த போலீசார் வரும் வழியில் அவர்களது உறவினர்களை சந்திக்க வைத்ததாக புகார் எழுந்தது. மேலும், அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,

இது தொடர்பாக சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் நடராஜன், பிரபு, வேல்குமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், துறை ரீதியான விசாரணை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி