ஆப்நகரம்

கோவை: மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை வளைத்துப்பிடித்த போலீஸார்!

கோவை, சரவணம்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போன்ற தோற்றத்தில் கஞ்சா விற்றுவந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 16 Oct 2019, 1:29 pm
கோவை, சரவணம்பட்டியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இது கோவை நகரின் மற்ற பகுதிகளை விட அதிக அளவில் பணப்புழக்கம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடமும், ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடமும் கஞ்சா உட்பட போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது.
Samayam Tamil Untitled collage


இதனால் சரவணம்பட்டி போலீஸார் அவ்வப்போது அதிரடி சோதனை, வாகன சோதனை நடத்தி கஞ்சா விற்பனையை தடுத்து வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை கள்ள நோட்டு வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்: மேலும் இருவர் கைது..ரூ.14.09 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்

இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் போல தோற்றத்தில் உள்ளவர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடந்த நான்கைந்து நாட்களாக அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள், ஐடி நிறுவன ஊழியர்களின் செயல்பாடுகளைக் கவனித்து வந்தனர்.

அப்போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கும் மாணவர்கள் போல கல்லூரிக்கு செல்லும் சிலரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது தெரிய வந்தது. அப்பார்ட்மெண்டில் இருந்து கிளம்பும் இவர்கள் எந்த கல்லூரிக்கும் செல்லாமல் அப்பகுதியிலேயே இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவது தெரிய வந்தது. கல்லூரிக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளின் அருகில் நிற்பது போன்ற இவர்களின் செயல்பாடுகள் போலீஸாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது. தொடர்ந்து அவர்களை கண்காணித்தபோது அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.

கோவை: கத்தியால் குத்தி 30 லட்சம் ரூபாய் வழிப்பறி!

துடியலூர் சாலையில் உள்ள கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்கள் 5 பேரும் மாணவர்களுக்கு கஞ்சா விற்கும்போது சரவனம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வேலாயுதத்தின் மகன் வல்லரசு (19). இவர் துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர். இவருடைய நண்பர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ராஜா (20), கோவை புளியங்குளதைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் விக்கு என்கிற சண்முகம் (19), கோவை ஆவாரம்பாளையதை சேர்ந்த ரவி என்பவரின் மகன் தருமன் என்கிற இன்பேண்ட் ராஜ் (20), கோவை நல்லாம்பாளை யதை சேர்ந்த அசோகனின் மகன் அஜித் (21) என்பது விசாரணையில் தெரியவந்தது.

புதைக்கப்பட்ட குழந்தையை 48 மணி நேரத்துக்குபின் மீட்டு டாக்டர்கள் சிகிச்சை!

இவர்கள் 5 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று சொல்லி தனியார் அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்றது மற்றும் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. விக்கு , அஜித் ஆகிய இருவரும் ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள பல்வேறு குற்ற வழக்குகள், கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவ, மாணவிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வது மட்டுமின்றி இரவு நேரங்களில் தனியாக சாலையில் செல்வோரிடம் வழிப்பறி செய்வது இருசக்கர வாகனங்களை அடித்து பிடுங்குவது கொலை மிரட்டல் விடுப்பது என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா, மோட்டார் பைக்குகள், பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 5 பேரையும் கோவை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி