ஆப்நகரம்

திருச்சியில் பிரபல பைனான்ஸ் கம்பெனி இயக்குனர் கைது... பலகோடி மோசடி?

திருச்சியில் பிரபல நிதி நிறுவன நிா்வாகி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 17 Feb 2023, 5:32 pm
திருச்சி மன்னாா்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூா், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 'எல்பின்' நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு மற்றும் நிலம் தருவதாக விளம்பரம் செய்தனர்.
Samayam Tamil finance company fraud


இதை நம்பி பொதுமக்கள் பலரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில், கூறியபடி இரட்டிப்பு பணம், நிலம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து எல்பின் நிறுவனம், அதோடு தொடா்புடைய 'ஸ்பேரோ குளபல் டிரேட்', வராகமுனி தனியாா் நிறுவனம், ஜேபி ஓரியண்ட் நிறுவனம், ஆா்எம் வெல்த் கிரியேஷன், இன்பினி கேலக்ஸி நிறுவனம், மற்றும் இதைச் சாா்ந்த அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட், அறம் தொலைக்காட்சி சேனல், தமிழ் ராஜ்ஜியம் செய்தித்தாள் ஆகிய நிறுவனங்கள் மீது திருச்சி, தஞ்சாவூா், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், பெரம்பலூா், கோவை, சென்னை ஆகிய 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அளிக்கப்பட்ட ஏராளமான புகாா்களின் பேரில் வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலின் படி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் அபின் தினேஷ் மொடக் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன் காா்த்திக்குமாா் தலைமையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த எல்பின் நிறுவன நிா்வாக இயக்குநர் ரமேஷ்குமார் தனிப்படை குழுவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் ரமேஷ் குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி