ஆப்நகரம்

போக்சோ வழக்குகளை போலீசார் கையாள புதிய விதிகள் - ஐகோர்ட் நீதிபதிகள் பரிந்துரை

போக்சோ வழக்குகளை போலீசார் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை குறித்து புதிய விதிகளை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை

Samayam Tamil 27 Dec 2022, 10:34 am
தமிழகத்தில் போக்சோ மற்றும் சிறார் தொடர்பான வழக்குகளை காவல்துறை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்க சிறப்பு அமர்வை அமைக்கக்கோரி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.
Samayam Tamil file pic
file pic


போக்சோ வழக்குகளை போலீசார் கையாளுவதில் தொடங்கி நீதிபதிகள் விசாரணை நடத்துவது வரை பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக காதலர்கள் இருவரும் அவரவர் சம்மதத்துடன் பாலுறவு வைத்துக்கொண்டாலும் வயதை காரணம் காட்டி போக்சோ வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சூழல் நிலவுகிறது. சில நாட்களுக்கு போக்சோ வழக்குகளை விசாரிப்பதில் நீதிமன்றத்தில் சிக்கல் இருந்து வருவதால் இளம் பருவத்தினர் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ காட்சி வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வீடியோவில் இருந்த சிறுமி சிதம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவி என்பதும் அவரது கழுத்தில் தாலி கட்டும் மாணவர் சிதம்பரம் அருகே உள்ள வடஹரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்திவிட்டு மாணவரை கைது செய்தனர். மாணவியை கடலூரில் உள்ள சமூக பாதுகாப்பு துறையின் குழந்தைகள் நலக்குழு காப்பகத்தில் அடைத்தனர்.

இதனையடுத்து, மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உரிய விசாரணை எதுவும் நடத்தாமல் எங்களுக்கும் தெரிவிக்காமல் எனது மகளை போலீசார் காப்பகத்தில் அடைத்து விட்டனர் என்றும் எனவே எனது மகளை மீட்டுத்தருமாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீசாரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்ததோடு மாணவியை அவரது தந்தையிடம் உடனே ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை போலீஸார் கையாளுவது குறித்து புதிய விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மாணவிக்கு தாலி கட்டியது தொடர்பாக போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கு விசாரணையை கடலூர் சிறார் நீதிக்குழும விசாரணைக்கு மாற்றினர்.

மேலும், போக்சோ மற்றும் சிறார் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை போலீஸார் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களை உத்தரவாக பிறப்பிக்க வேண்டியிருப்பதால், இதற்காக சிறப்பு அமர்வை ஏற்படுத்தவும் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அடுத்த செய்தி