ஆப்நகரம்

எளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளும் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள்!

நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளையம் ஏரியில், அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மணலை கொள்ளையடித்து செங்கல் சூளை மற்றும் கட்டிட கட்டுமான பணிக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Samayam Tamil 10 Jul 2019, 4:55 pm
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் ஊராட்சிக்குட்பட்ட எளையாம்பாளையம் கிராமத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. மழை மற்றும் கிழக்குகரை கால்வாய் பாசனத்தில் கிடைக்கும் தண்ணீர், இந்த ஏரியில் தேங்கி நிற்கும்.
Samayam Tamil எளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளும் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள்!
எளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளும் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள்!


தற்போது வறட்சி காரணமாக ஏரி வறண்டு போனது. இந்த ஏரியில் வண்டல் மண், செம்மண், கழிமண் மற்றும் மணல் உள்ளது. இதனையறிந்த தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், கடந்த இரண்டு நாட்களாக 100-க்கும் மேற்பட்ட லாரிகள், மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்கள், அடியாட்களுடன் ஏரியில் முகாமிட்டு மண்ணை அள்ளி குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் ஏரியை சுற்றியுள்ள எளையாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், களியனூர், கந்தாம்பாளையம் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் யாருக்கும் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் காளியண்ணன் என்ற விவசாயிக்கு, அவருடைய விவசாய நிலத்திற்கு ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ள ஒரு யூனிட் வீதம் 30 டிராக்டர்கள் மட்டுமே அனுமதி பெற்றுக்கொண்டு அமைச்சரின் உறவினர்கள் போலியான டோக்கன் தயார் செய்து மண்ணை முறைகேடாக அள்ளி செங்கல் சூளைகள் மற்றும் கட்டிட கட்டுமான பணிகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.

இதையடுத்து, நேற்று மதியம் கிராம மக்கள் சிலர் ஏரிக்கு சென்று மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அங்கிருந்த அதிமுக பிரமுகர்கள், கிராம மக்களை மிரட்டினர். இதுகுறித்த தகவலறிந்து ஏரிக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், ஏரியில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் மண் அள்ளும் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு, கிராம மக்களை அங்கிருந்து துரத்தியடித்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் இருந்து மண் அள்ளி கொண்டு சென்றனர்.

அங்கு வந்த கிராம நிர்வாக பெண் அலுவலரை விவசாயிகள் முற்றுகையிட்டு கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த கிராம நிர்வாக அலுவலர், உயர் அதிகாரிகள் ஏரியில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்னை அள்ளும் போது யாரும் தடுக்காமல் பார்க்க வேண்டியது என் வேலை என்று கூறினார்.

விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள 30 டிராக்டருக்கு மட்டுமே அனுமதி பெற்றுக் கொண்டு அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் நாள்தோறும் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். தடுக்க வேண்டிய வருவாய் துறையினர், மற்றும் காவல்துறையினர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் கிராமமக்கள் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர்.

அடுத்த செய்தி