ஆப்நகரம்

அரசு அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததால் ஏற்பட்ட சோகம்: முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் எட்டு வாரங்களுக்குள் கழிவறை கட்டுவது குறித்து நிலை அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

Samayam Tamil 26 Mar 2022, 3:05 pm
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சரண்யா என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த வேளாண் விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாத நிலை இருந்தது. இதனால் சரண்யா உள்பட மற்ற பெண் பணியாளர்கள் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் கழிவறைக்கு சென்றுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil saranaya


இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கம்போல் சரண்யா அருகில் உள்ள வீட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த ஓட்டின்மீது சரண்யா கால்வைக்கும்போது ஓடு உடைந்து செப்டிக் டேங்க் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். அங்கு போராடிய அப்பெண் வெளியேற முடியாதல் தவித்துள்ளார்.

இதனிடையே, கழிவறைக்கு சென்ற பெண் வெகுநேரமாக வராத காரணத்தினால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் சரண்யாவை தேடி சென்றப்போதுபொழுது செப்டிக் டேங்க்குக்குள் மூழ்கி இருப்பதை பார்த்துள்ளனர்.

அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால் வேறுவழியின்றி அருகில் மற்றொரு வீட்டிற்கு கழிவறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதன் காரணமாகவே சரண்யா உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினார். மேலும் அரசு அலுவலகங்களில் கழிவறை வசதி இல்லாத அவலம் நீடிப்பதாகவும், இதற்கு அரசு உடனே தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சரண்யாவின் குடும்பத்திற்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது மேலும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் கழிவறைகளை கட்டுவது குறித்த நிலை அறிக்கையை 8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது மேலும் இவ்வழக்கில் தவறு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி