ஆப்நகரம்

3 மாணவர்களின் உயிரை பறித்த மோசமான சுவர்... விபத்து எப்படி ஏற்பட்டது?

நெல்லை அரசு உதவி பெறும் பள்ளி சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

Samayam Tamil 17 Dec 2021, 1:08 pm
நெல்லை டவுன் பகுதியில் உள்ள சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil nellai school building collapse


நெல்லை டவுன் பகுதியில் சாஃப்ட்டர் மேல்நிலைப்பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 10:50 மணிக்கு பள்ளி இடைவேளை விட்ட நேரத்தில் மாணவர்கள் கழிவறை அருகே வந்துள்ளனர். கழிவறையின் முகப்புப் பகுதியில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப் பட்டுள்ளது.

மாணவர்கள் கூட்டமாக வந்த நிலையில் ஒருவர் பின் ஒருவராக சென்றபோது எதிர்பாராதவிதமாக தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி எட்டாம் வகுப்பு பயிலும் விஸ்வரஞ்சன் என்ற மாணவனும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அன்பழகன் என்ற மாணவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 2 மாணவர்கள் உடல்களை மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு மாணவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை பள்ளி விபத்து: உயிரிழப்பு 3ஆக உயர்வு..!

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்து 3 மாணவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறையில் உள்ள தளவாடங்களையும் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

அடுத்த செய்தி