ஆப்நகரம்

கையில் ஆதாரம்.. கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நெருக்கடி.. சவுக்கு சங்கர் பரபரப்பு புகார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் அதிர்ச்சி குற்றசாட்டை வைத்துள்ளார்.

Samayam Tamil 28 Nov 2022, 4:47 pm
அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாத சிறை தண்டனை பெற்றார். அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து பழைய நான்கு வழக்குகளில் சென்னை சைபர் க்ரைம் பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
Samayam Tamil savuku shankar
savuku shankar


அந்த வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ள சவுக்கு சங்கர், கடலூர் சிறை அதிகாரிகள் மீதும் திமுக மீதும் கடுமையான குற்றசாட்டுகளை வைத்து வருகிறார். இந்த நிலையில், இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு கையெழுத்து இட வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சென்னை காவல்துறை மற்றும் உளவுத்துறை மீது குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமீன் கிடைத்து வெளியே வந்த்துள்ள தன்னை, சென்னை பெருநகர காவல்துறை மற்றும் உளவுத்துறை வாட்ஸ்அப் மூலம் ஒட்டு கேட்டு வருவதாக கூறினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உளவுத்துறை டிஐஜி டேவிட் சந்த் இருவரும் தன்னுடைய வாட்சப் உரையாடல்களை ஒட்டு கேட்பதாகவும், தன்னிடம் பேசுபவர்களை மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

மேலும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதற்கு முன்பே சட்ட விரோதமாக ஒட்டு கேட்கும் பழக்கம் கொண்டவர் என்றும் 2007 மற்றும் 2008 ஆண்டு சென்னை பெருநகர காவல் ஆணையரின் மனைவி மம்தா ஷர்மா தனியார் நிறுவனத்தில் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் வேலையைதான் செய்து வந்தார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அந்த உளவுத்துறை நிறுவனத்தில் தேவேந்திர யாதவ் என்பவருடன் சேர்ந்து மம்தா ஷர்மா இயக்குனராக இருந்ததாகவும், 2006முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கருணாநிதி இருந்த போது நூற்றுக் கணக்கான தொலைபேசி எண்களை ஒட்டு கேட்டதாவும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.

சங்கர் ஜிவாலுக்கு மறைமுகமாக வாட்ஸ்அப் மூலம் ஓட்டு கேட்பது கைவந்த கலை என்றும் அரசுக்கு எதிராக உரையாடல்களை ஒட்டுகேட்பது குறித்து தனி நிதியுதவி வாங்கியதாக தகவல் வந்துள்ளதாகவும் உரிய ஆதாரங்களுடன் மிகவிரைவில் நீதிமன்றத்தில் நாடப் போவதாகவும் சவுக்கு சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனரை குறித்து சவுக்கு சங்கர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி