ஆப்நகரம்

பயணத்தின் போது உயிரிழந்த பெண்- பேருந்து பணியாளர்களின் மனிதநேயமற்ற செயல்

பயணத்தின் போது உயிரிழந்த பெண். பேருந்து பணியாளர்கள் செய்த மனிதநேயமற்ற செயல். மனிதம் மறித்துவிட்டதா என பொதுமக்கள் கவலை.

Samayam Tamil 19 Feb 2019, 2:32 am
நெஞ்சு வலியால மயக்கமடைந்த பெண் பயணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், சாலையோரம் இருந்த நடைபாதையில் கிடத்திவிட்டு பேருந்தை ஓட்டிச்சென்ற தனியார் பேருந்து பணியாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil booshanam


பெங்களூருலிருந்து திருவண்ணாமலைக்கு சென்றுக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதை மற்ற பயணிகளிடம் தெரிவித்த அவர் நிலையில், பேருந்து காட்பாடி சித்தூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

பிறகு, பேருந்து பணியாளர்கள் பெண்ணின் இருக்கைக்கு வந்த போது, அவர் அசைவற்று நினைவிழந்து இருந்துள்ளார். இதனால் அச்சமுற்ற ஓட்டுநர் உட்பட பேருந்து பணியாளர்கள், அவரை தூக்கிக்கொண்டு வெளியே வந்து சாலையோரம் இருந்த நடைபாதையில் கிடத்திவிட்டு பேருந்தை ஓட்டிக் கொண்டு சென்றனர்.

இதை பார்த்த கடை உரிமையாளர் ஒருவர், இதுகுறித்து காட்பாடி காவலர்களுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அவசர ஊர்தி மூலம் மயக்கமடைந்த பெண்ணை வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். பெண்ணிடமிருந்த கைப்பேசி மூலம் அவரது மகன் மஞ்சுநாத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த அவர், தனது தயார் குறித்து விவரங்களை அளித்தார். அதன்படி, உயிரிழந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்த பூஷணம் (60) என்பது தெரியவந்தது. பெங்களூருவில் வசிக்கும் தனது மூன்று மகன்களை பார்த்துவிட்டு, செய்யாறில் வசிக்கும் மஞ்சுநாத்தை பார்க்க வந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

எனினும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சுநாத், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்படவில்லை என்றும், ஆனால் பேருந்து பணியாளர்களின் மனிதநேயமற்ற செயல் தனக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

எனினும், காட்பாடி காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் பேருந்து பணியாளர்களிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி