ஆப்நகரம்

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு; 'தற்கொலைதான்'.. குற்றப்பத்திரிகையில் பகீர் திருப்பம்

கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் முக்கிய திருப்பமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 15 May 2023, 4:16 pm
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Samayam Tamil srimathi case


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்தாண்டு ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் பள்ளி விடுதியில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகம்; மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாகவும், பெற்றோர் தரப்பில்; மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மாறி மாறி கருத்துக்கள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து, சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பள்ளி அருகே பயங்கர வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் (வயது 48), பள்ளியின் செயலாளர் சாந்தி (44), பள்ளியின் முதல்வர் சிவசங்கரன் (57), ஹரிப்பிரியா (40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.


சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கியது. அந்த விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி, ' குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நிரபராதிகள் எனவும், அவர்கள் அனைவரும் எவ்வித முகாந்திரமுமின்றி கைது செய்யப்பட்டது தேவையற்றது.. மாணவியின் மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமே இல்லை, அது தற்கொலைதான் என்று குறிப்பிட்டிருந்தது. இது பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மட்டுமின்றி மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எந்த விசாரணையும் நடத்தாமலே கோர்ட் இந்த முடிவுக்கு வந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராகவும், பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென்றும் ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் "உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் ஜாமீன் வழங்கப்படலாமா வேண்டாமா என்பது குறித்து மட்டுமே இருந்திருக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையில் வழக்கு தொடர்பான தகுதிகள் குறித்து இந்தளவுக்கு விவாதித்திருப்பது முற்றிலும் அநாவசியமானது. ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, வழக்கு குறித்து விரிவாக விவாதிக்கூடாது என்பது ஏற்கெனவே சட்டரீதியாகத் தெளிவுபடுத்தப்பட்ட விஷயம் என்பதைத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த எந்த கருத்துகளையும் பிரதான வழக்கு விசாரணையின்போது விசாரணை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஸ்ரீமதி வழக்கை கடந்த 9 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி இன்று 1200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் இல்லை என்றும் தற்கொலைக்கான முகாந்திரம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படியென்றால் சம்பவம் நடந்த நாளன்று மாணவியின் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பது விரைவில் தெரிய வரும்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி