ஆப்நகரம்

நெல்லை எஸ்பி மீது நடவடிக்கை.. அவரும் வெயிட்டிங் லிஸ்ட்.. பல்வீர் சிங்கிடம் விசாரணை ஆரம்பமாகிறது

பல் பிடுங்கிய விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Samayam Tamil 4 Apr 2023, 12:54 pm
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி-யாக இருந்த பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விகேபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த் உத்தரவை நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் பிறப்பித்திருந்தார்.
Samayam Tamil nellai asp case


இந்த நிலையில், இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் பணிந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார். இதற்கிடையே தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனுக்கு நெல்லை ஏஎஸ்பி-யாக கூடுதல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை கட்டிங் பிளேயரை கொண்டும், வாயில் ஜல்லி கற்களை கொட்டி உடைத்தும் கொடூர சித்திரவதை செய்ததாக சொல்லப்படும் பல்வீர் சிங்கை சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கூடுதலாக மாநில மனித உரிமை ஆணையமும் விசாரிக்க முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், பல்வீர் சிங்கிடம் மாநில மனித உரிமை அடுத்த வாரம் விசாரணை நடத்தவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் 9 பேர் இதுவரை சார் ஆட்சியர் விசாரணையில் விளக்கம் அளித்துள்ள நிலையில் இரண்டு பேர் தவிர 7 பேர் பல்வீர் சிங்கிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனே திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது வழக்கு அடுத்தகட்ட நகர்வை நோக்கி வேகமாக நகர்வதாக பார்க்கப்படுகிறது. மேலும், விரைவில் முக்கிய திருப்பங்கள் நிகழ வாய்ப்புள்ளது. காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட சமூக வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்களிப்பு உள்ளது.

இந்நிலையில், எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதால் ஏஎஸ்பி மட்டுமின்றி எஸ்பி சரவணனிடமும் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி