ஆப்நகரம்

தினமும் தொல்லை... கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி.. நெல்லை க்ரைம் பின்னணி

நெல்லையில் கணவனை விஷம் வைத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பின்னணி தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 3 Oct 2022, 6:28 pm
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டத்தை அடுத்த குஞ்சன்விளை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிங்காரவேலன் சமீப காலமாக மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், மதுபோதையில் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Samayam Tamil nellai murder


இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்காரவேலனின் தாயார் மூக்கம்மாள் தனது மகன் வீட்டுக்கு சென்றபோது அங்கு சிங்காரவேலன் வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிங்காரவேலனின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து குளிர்பதன பெட்டியில் வைத்து இறுதி சடங்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கிடையே தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பாக ஜெயக்கொடியிடம் விசாரிக்க வேண்டும் என்றும் உவரி போலீசில் தாயார் மூக்கம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் உவரி போலீசார் இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்ததோடு சிங்காரவேலனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ஜெயக்கொடியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார். உடனே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், சிங்காரவேலன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் குருணை மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்ததாக ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மது அருந்தி விட்டு தினமும் தகராறு செய்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி