ஆப்நகரம்

ஆட்சி, போலீஸ் அதிகாரத்தால் பெண் தற்கொலை..? புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் திமுக பிரமுகரின் டார்ச்சரால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Oct 2022, 12:04 pm
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்பனைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் மனைவி கோகிலா. இவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்து வந்த புதுக்கோட்டை போலீசார் கோகிலாவின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவித்துவிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கோகிலா எழுதிவைத்திருந்த தற்கொலை கடிதம் கிடைத்து அதில் எழுதப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil pudukottai


அதில், பாதை பிரச்சினை காரணமாக குமார் - புவனேஸ்வரி தம்பதி என்னை மனரீதியாக மிரட்டல் விட்டு துன்புறுத்தியுள்ளனர். குமார் திமுக கட்சியின் பிரமுகர் என்பதாலும் புவனேஸ்வரி காவல் நிலையத்தில் பணிபுரிவதாலும் என்னையும் என் கணவரையும் மனரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பொய் வழக்கில் என்னை கைது செய்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வரும்போது என்னை திருச்சி சிறையில் அடைக்கப்பபோவதாக மிரட்டினர். இதனால் மனவேதனை தாங்காமல் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என கோகிலா அந்த கடிதத்தில் விவரித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குமார் - புவனேஸ்வரி மற்றும் கோகிலாவை மிரட்டிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், நாம் தமிழர், பாஜக கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், கோகிலாவின் தற்கொலை விவகாரத்தில் குமார், புவனேஸ்வரி மற்றும் காவலர்கள் 6 பேர் மீது முதற்கட்டமாக சந்தேக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்சி, காவல்துறை அதிகார துஷ்பிரயோகத்தில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி