ஆப்நகரம்

ரேபிடோ டிரைவர் பாலியல் தொல்லை.. பைக்கில் இருந்து குதித்த இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ!

பெங்களூருவில் ரேபிடோ டிரைவரின் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடும் பைக்கில் இருந்து கீழே குதித்த பெண்

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 27 Apr 2023, 3:23 pm
சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் டாக்ஸி சேவைகள் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் ''ரேபிடோ'' என்ற பைக் சேவையும் ஓர் அங்கமாக உள்ளது. இந்த சேவையை இளைஞர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil rapido


குறிப்பாக இரவு நேரங்களில் ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் தனிமையில் வந்திறங்கும் ஆண்களும், பெண்களும் ஓலா, ஊபர் டாக்சி சேவையை விட குறைவான கட்டணத்துக்கு ரேபிடோ புக் செய்கின்றனர். இந்த பைக் சேவையில் பெரும்பாலும் ஆண் ஊழியர்களே இருந்தாலும் ரேபிடோ நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையில் பெண் கஸ்டமர்கள் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. ஆனால், அந்த நம்பிக்கையை சீர்குலைத்த சம்பவம் ஒன்று பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூருவில் 30 வயதான இளம்பெண் கடந்த 21 ஆம் தேதி இரவு இந்திராநகருக்கு செல்ல ரேபிடோ புக் செய்துள்ளார். அதன்படி, இரவு 11:10 மணியளவில் அந்த இளம்பெண்ணின் இடத்துக்கு ரேபிடோ பைக் டிரைவர் வந்துள்ளார். அப்போது, ஓடிபி சரிபார்ப்பதற்காக அந்த பெண்ணின் செல்போனை வாங்கிய ரேபிடோ டிரைவர் டிராப் லொகேஷனை இந்திராநகரில் இருந்து தொட்டபல்லாபுராவிற்கு மாற்றியுள்ளார்.


இதனை அறியாமல் அந்த பெண் பைக்கில் ஏற பைக் கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் பைக் தவறான பாதையில் செல்வதை அறிந்த இளம்பெண் அதுகுறித்து பைக் டிரைவரிடம் கேட்டுள்ளார் ஆனால், அந்த நபர் பெண்ணின் செல்போனை வாங்கிக்கொண்டு பைக்கை வேகமாக இயக்கியுள்ளார். மேலும், பின்னால் அமர்ந்துகொண்டிருந்த அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஓடும் பைக்கில் இருந்து குதித்துள்ளார். அப்போது, பைக் டிரைவர் பெண்ணின் செல்போனுடன் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார். ஓடும் பைக்கில் இருந்து விழுந்து காயமடைந்த அந்த பெண் தடுமாறி சாலையை கடந்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவை ஏஎன்ஐ நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதிர்ச்சி சம்பவத்தை குறித்து பெங்களூரு காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும், இச்சம்பவத்துக்கு பெண்கள் அமைப்பினரும் அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி