ஆப்நகரம்

சேலத்தில் பெண்ணையே பெண் சிறைபிடித்து வைத்த சம்பவம்..!

சேலம் அருகே பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.

Samayam Tamil 19 Mar 2020, 7:39 pm
சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் அருகே உள்ள நாராயண நகர் பகுதியை சேர்ந்தவர் பூமொழி (46). இவர் ஜவுளி தொழில் செய்தபடியே தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியை நடத்திவருகிறார். அதேபோல தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்துள்ளார்.
Samayam Tamil சேலத்தில் பெண்ணையே பெண் சிறைபிடித்து வைத்த சம்பவம்


இந்தநிலையில் பூமொழியுடன் சேர்ந்து திருச்சியைச் சேர்ந்த பத்ரி சீனிவாசன் என்பவரும் ஜவுளித் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் பத்ரி சீனிவாசன் தொழில் நடவடிக்கைகளுக்காக பூமொழியிடம் 18 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் பெற்ற பணத்தை பத்ரி கொடுக்க முடியாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் பத்ரி சீனிவாசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாயமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து பத்ரி சீனிவாசனின் மனைவி பூ மொழிக்கு தொடர்பு கொண்டு தனது கணவர் குறித்த தகவலை கேட்டுள்ளார். அதற்கு பூமொழி சேலம் வந்தால் இருவரும் சேர்ந்து அவரை தேடலாம் என வரவழைத்துள்ளார்.

கோவையில் நாளுக்கு நாள் பதற்றம்..! தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 4 பேர் மீது நடவடிக்கை

இதையடுத்து பத்ரி சீனிவாசனின் மனைவி ஹரிணி நேற்று சேலம் வந்துள்ளார். பின்னர் ஹரிணியை பூமொழி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அறை ஒன்றில் அடைத்து வைத்து ரூபாய் 18 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என கூறி மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஹரிணி தான் கடத்தப்பட்டது குறித்து திருச்சியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர் ஹரிணியின் உறவினர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் ஹரிணி கடத்தல் குறித்து புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடத்தப்பட்டுள்ள ஹரிணியை கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையாளர் தனிப்படை அமைத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படை போலீசார் இன்று பூமொழியை கைது செய்து அவரது வீட்டில் அடைத்து வைத்து இருந்த ஹரிணியை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட பூமொழியின் மீது ஆள் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஹரினி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி