ஆப்நகரம்

கோவை: சண்டையில் நண்பனை விட்டுச் சென்ற கும்பல்..! பரிதாபமாக போன உயிர்...

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் அரிசி மாவு ஆட்டி விற்பதில் ஏற்பட்ட தகராறில் உடன் சென்றவருக்கு அரிவாள் வெட்டு விழுந்து பலி.

Samayam Tamil 4 Oct 2020, 8:49 pm
கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுல்தான் என்பவரது மகன் அன்வர் பாஷா. இவர் அப்பகுதியில் அரிசி மாவு ஆட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதேபோல் கண்ணன் என்பவரும் அதே பகுதியில் அரிசி மாவு ஆட்டி விற்பனை செய்து வருகிறார்.
Samayam Tamil nagaraj


இதனிடையே தொழில் போட்டி காரணமாக ஒருவருக்கு ஒருவர் விலைகளை குறைத்து விற்பனை செய்து வந்ததால் கடந்த இரண்டு வருடமாக இருவருக்கும் இடையே முன் பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி கண்ணன் அவரது நண்பர்களுடன் அரிசி மாவு விற்பனை விலை குறித்து பேசி ஒரு முடிவு செய்துகொள்ளலாம் என அன்வர் பாஷாவை சந்திக்க சென்றுள்ளார். அப்போது கோவை சங்கனூரில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் முருகன் என்பவரது மகன் நாகராஜும் உடன் சென்றுள்ளார்.

அப்போது அன்வர் பாஷாவுடன் அண்ணா மார்க்கெட்டில் லோடு மேன் வேலை செய்து வரும் அவரது நண்பர்களான பாண்டியராஜன் மற்றும் மணி ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பாக மாறியது. இதில் அன்வர் பாஷா, பாண்டியராஜன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து தாக்க தொடங்கினர்.

இதில் கண்ணன் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட உடன் வந்த நாகராஜ் மட்டும் அன்வர் பாஷாவிடம் சிக்கிக்கொண்டார். இதில் அன்வர் பாஷா, பாண்டியராஜான், மணி ஆகியோர் அரிவாளால் நாகராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

நான்கு மாதங்களாக தொல்லை, ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாய் குமுறல்!

இதில் நாகராஜிற்கு தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பாண்டியராஜன், மணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான அன்வர் பாஷாவை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி பலியானதால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவாக இருந்த அனைவரையும் துடியலூர் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி