ஆப்நகரம்

ஆடியோவால் சிக்கிய விஏஓ - தருமபுரி கலெக்டர் அதிரடி!

தருமபுரி மாவட்டம், சில்லாரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் லஞ்சம் வாங்கிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 28 May 2022, 9:48 am
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சில்லாரஅள்ளி(Sillarahalli) கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்(VAO) பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி இருவரும் பொதுமக்களுக்கு செய்யும் சேவைகள் அனைத்திற்கும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
Samayam Tamil Dharmapuri bribe vao arrest
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பரமசிவம்


முதியோர் உதவித்தொகை விண்ணப்பம், மாணவர்களின் வருமானச் சான்று, பிறப்பு, இறப்பு, வாரிசு, கைம்பெண் உதவித்தொகை, நிள அளவை என 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சேவைகளுக்கு ஏற்ப லஞ்சமாக பெற்றுள்ளனர்.என சில்லாரஅள்ளி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பரசுராமன் என்பவர் தனது நிலத்தை அளந்து கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலருக்கு கேட்டுள்ளார். அப்பொழுது 6,000 ரூபாய் பணம் கொடுத்தால் உடனடியாக அளவீடு செய்து கொடுப்பதாக விஏஓ பரமசிவம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பரசுராமன் 6,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால், பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாத காலமாக அளவீடு செய்ய வராததால், அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்பொழுது பேசிய கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் உரிய பதிவேடுகள் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் அளவிடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், பணம் பெற்றுக் கொண்டும் ஏன்? காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, வேண்டும் என்றால் உனது பணத்தை திருப்பி வாங்கிக்கொள் என கிராம நிர்வாக அலுவலர் பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து சமயம் தமிழ் செய்தி வெளியிட்டது. பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய தொடர்பான ஆடியோ குறித்து விசாரணை நடத்த, அரூர் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் வே.முத்தையன் நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
Broiler: பிராய்லர் பிரியர்களுக்கு சோக செய்தி...!

இதனால் சில்லாரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் பரமசிவத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரூர் கோட்டாட்சியர் வே.முத்தையன் உத்திரவிட்டார். மேலும், உதவியாளர் ஜெயந்தி சஸ்பெண்ட் அல்லது பணியிட மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி