ஆப்நகரம்

நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி... அதிகாரிகளை கண்டித்து திடீர் போராட்டம்!

ரேகடஹள்ளியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில், நகை கடன் தள்ளுபடி வழங்குவதில் குளறுபடி அதிகாரிகளை கண்டித்து பயனாளிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 23 Mar 2022, 4:39 pm
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகே ரேகடஹள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேகடஹள்ளி ,ஜாலியூர் ,அண்ணாநகர் காந்தி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 400 க்கும் மேற்பட்டோர் தங்களுடைய நகைகளை அடகு வைத்து உள்ளனர் .
Samayam Tamil dmp


இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் தங்க நகைகளை வைத்து உள்ள பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந் நிலையில் ரேகடஹள்ளியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 120 பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய உத்திரவு வந்துள்ளது.

மீதமுள்ள 50 க்கும் மேற்பட்டோருக்கு நகை கடன் தள்ளுபடி செய்வதில் குளறுபடி உள்ளதாகவும், சில பயனாளிகள் 3½ மற்றும் 4½ பவுன் வைத்துள்ளனர். அதில் அரை பவுன் தங்க நகை மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் குளறுபடி உள்ளதாக அதிகாரிகளை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீருக்கு திண்டாடும் மக்கள்... உலக தண்ணீர் தினத்தில் சோகம்!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயனாளி கூறுகையில்; நான் எனது மனைவி பெயரில் ரேகடஹள்ளியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2½ பவுன் தங்க நகை அடகு வைத்துள்ளேன். இந்த நகையில் அரை பவுன் நகை மட்டும் தான் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது . மீதி இரண்டு பவுன் தங்க நகை தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் கேட்ட பொழுது; இரண்டு பவுன் தங்க நகை, செல்வம் என்பவரின் ஆதார் எண்ணில் பதிவாகி உள்ளது. உங்கள் ஆதார் எண்ணில் இந்த நகை இல்லை என கூறி நகை கடன் தள்ளுபடியாக கடிதம் எழுதித் தாருங்கள் என்று கூறியுள்ளனர். என்னைப்போல சுமார் 50க்கும் மேற்பட்டோர் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலருக்கு ஆதார் எண் மாறி உள்ளது. பலருக்கு ரேஷன் எண் மாறி உள்ளது. பலருக்கு இன்னும் தள்ளுபடி பெயர் பட்டியலில் பெயரே வரவில்லை எனவும், அரசுப் பணியில் உள்ளவர்கள், விவசாய பயிர்க் கடன் வாங்கி உள்ளவர்கள், வசதி படைத்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


ஆனால் எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களுக்கு நகைக்கடன் முறையாக தள்ளுபடி செய்யவில்லை. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் நிறைய முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆகவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்து முறையாக ஏழை எளிய மக்களுக்கு தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் . நகை கடன் தள்ளுபடி செய்வதில் குளறுபடி செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி