ஆப்நகரம்

400 கிலோ கடத்தல் சந்தன கட்டைகளுடன் சிக்கிய கர்நாடக போலீஸ்: இதெல்லாம் ஒரு வழக்கமா?

400 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த கர்நாடக காவல் துறையினர், ஈரோடு போலீசாருக்கு தகவல் கூறாமல் எடுத்துச் சென்ற போது, வாகனச் சோதனையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Oct 2021, 4:05 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் நெப்போலியன் தலைமையில் போலீசார் நேற்று காலை சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் புதுவடவள்ளி அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தினர்.
Samayam Tamil 400 கிலோ கடத்தல் சந்தன கட்டைகளுடன் சிக்கிய கர்நாடக போலீஸ்: இதெல்லாம் ஒரு வழக்கமா?


அப்போது சத்தியமங்கலத்திலிருந்து வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த சாக்கு மூட்டைகளில் மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் லாரியில் வந்தவர்கள் தங்களை கர்நாடக மாநில காவல் துறையின் வனக்குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் எனவும், அதில் ஒருவர் ஆய்வாளர் சுரேஷ் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும் அவர்கள், சத்தியமங்கலம் புளியங்கோம்பை பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தின் அருகில், கர்நாடக மாநில வனத்தில் வெட்டி எடுத்து வரப்பட்ட 400 கிலோ சந்தனக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இங்கு வந்ததாகவும், குறிப்பிட்ட சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து எடுத்துச் செல்வதாகவும் கூறினர்.

ஆனால் இது குறித்து ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி வந்தார்கள் என சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவர்களை சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கர்நாடக மாநில காவல் துறையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆவணங்கள் சரிபார்த்த பின், அவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளுடன் கர்நாடகமாநிலம் செல்ல அனுமதித்தனர்.

4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்!
போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனையிட்டபோது சாணம் மொழுகப்பட்டிருந்த சந்தன கட்டைகள் இருந்தன. மேலும் அதில் புளிய மரம் உள்ளிட்ட வேறு கட்டைகளுக்கும் மாட்டுச்சாணம் மொழுகப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சாதாரண கட்டைகளை சாணம் மொழுகி சந்தன கட்டை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் கும்பல் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சந்தனக்கட்டை பறிமுதலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டு உள்ளனரா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், மீண்டும் சந்தன மரக் கடத்தல் தலைதூக்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அடுத்த செய்தி