ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பு உண்மையா?

பள்ளிகள் திறப்பு தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பு பற்றிய உண்மை நிலவரம் தற்போது தெரிய வந்துள்ளது

Samayam Tamil 13 Aug 2020, 3:15 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் ஆறாம் கட்ட பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் UNLOCK செயல்முறையின் அடிப்படையில் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பள்ளிகள் திறப்பு தள்ளி போய் கொண்டே உள்ளது. எனினும், ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன. அதிலும் பல்வேறு போதாமைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுவதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

முன்னதாக, , ஜூலை மாதத்துக்கு பிறகு கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், இந்த அறிவிப்புக்கு பெற்றொர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பள்ளி, கல்லூரிகளை திறப்பு குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை எனவும், இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கியது.

இந்த வருஷம் முழுக்க பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - மத்திய அரசு அதிரடி!

அதேசமயம், பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம் என்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்டு தெரிவிக்குமாறு அனைத்து மாநில கல்வித்துறை செயலர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பேசிய மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவித்ததாக தகவல் வெளியாகின. இது அனைத்து செய்தி தளங்களிலும் பதிவிடப்பட்டன.


இந்த நிலையில், மத்திய அரசின் செய்தி நிறுவனமான பி.ஐ.பி. (Press Information Bureau) பள்ளிகள் திறப்பு தொடர்பாக வெளியான தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. அதில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்ததாக வெளியான தகவல் போலியானது என தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி