ஆப்நகரம்

FACT CHECK: விற்பனைக்கு வந்த ஜியோ அரிசி; இதெல்லாம் அம்பானி வேலை தானா?

ஜியோ லோகோ உடன் மூட்டைகளில் அரிசி, உணவு தானியங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு தயாராகும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 26 Dec 2020, 5:55 pm
ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதில் திருத்தம் என்ற பேச்சே வேண்டாம் என்ற விவசாயிகள் விடாப்பிடியாக இருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களால் கார்ப்பரேட்கள் தான் அதிக நன்மைகள் அடைவர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
Samayam Tamil Jio Rice Sales


இந்த சூழலில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் பெயரில் அரிசி, உணவு தானிய மூட்டைகள் விற்பனைக்கு தயாராகும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து துறைகளிலும் கால் பதித்து வரும் அம்பானி, தற்போது உணவு உற்பத்தி துறைக்குள்ளும் நுழைந்து எளிய மக்களின் வாழ்வை சூறையாட தயாராகி விட்டதா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உண்மை என்ன?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உணவு தானிய விற்பனையில் இறங்கவில்லை. ஜியோ லோகோ கொண்ட உணவு தானிய மூட்டைகளுக்கும், அம்பானி நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை.

FACT CHECK: நாய்கள் மதமாற்றம்-ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!
ஆதாரம்

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் அளித்துள்ள பதிலில், எங்கள் லோகோ உடன் ஏராளமான சாக்கு மூட்டைகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை பல்வேறு நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. நாங்கள் உணவு தானிய விற்பனையில் களமிறங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கூறுகையில், அரிசி, பருப்பு, கோதுமை விற்கும் மூட்டைகளில் ஜியோ லோகோவுடன் வர்த்தகர்கள் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த லோகோ பொதுமக்களிடையே மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. ஜியோ லோகோ உடன் கூடிய சாக்குகள் வெறும் 7 ரூபாய்க்கு பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்று கூறியது. மேலும் மகாராஷ்டிராவை அடிப்படையாகக் கொண்டு ’Jio Fresh', Shri JioAgro Food Products Private Limited' என ஜியோ பெயருடன் சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை உணவு தானிய விற்பனைத் துறையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முடிவு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அரிசி மற்றும் உணவு தானிய விற்பனைச் சந்தையில் ஈடுபடவில்லை என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி