ஆப்நகரம்

FACT CHECK: பாஜகவிடம் இருந்து அதிமுகவை மீட்க வரும் சின்னம்மா - ஓபிஎஸ் ட்வீட்!

பாஜகவிடம் இருந்து அதிமுகவை மீட்க வரும் சின்னம்மா என்று சசிகலாவை வரவேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட் பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 26 Jan 2021, 8:30 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27ஆம் தேதி (நாளை) விடுதலையாகவுள்ளார். இதனிடையே, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா நாளை விடுதலையாகவுள்ளார். ஆனால், உடல்நிலை முற்றிலும் குணமடைந்த பின்னரே பெங்களூருவில் இருந்து தமிழகம் வருவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, சசிகலா விடுதலையானதும் அதிமுகவில் ஏராளமான மாற்றங்கள் நிகழலாம் என்றும், அவரது பின்னால் பெரும்பாலானவர்கள் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் அதிமுகவில் ஒலிக்க தொடங்கியுள்ளன.

பரவும் செய்தி

இந்த நிலையில், சசிகலாவை வரவேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட் பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில், “மதிப்பிற்குரிய சின்னமா முழுமையாக குணமடைந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மத்திய பா.ஜ.க அரசிடம் சீக்கித் தவிக்கும் அதிமுகவை மீட்க உங்கள் வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவும் தகவல்


அதிமுக தலைமைக்கு குறிப்பாக சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் இது போன்று ட்வீட் பதிவிட்டுள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வரும் நிலையில், அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், இந்த ட்வீட்டை உண்மை என்று நம்பி பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், அந்த தகவல் போலியானது என்று தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு மற்றும் வழிமுறை

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல் தொடர்பான முக்கிய வார்த்தைகளை கொண்டு தேடியதில், எந்த அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமும் அத்தகைய செய்தியை வெளியிடவில்லை என்பது தெரிய வருகிறது.

ஓபிஎஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்


மேலும், அந்த ட்வீட்டில் இடம்பெற்றிருக்கும் தகவலில் ஏராளமான எழுத்துப்பிழைகள் உள்ளன. துணை முதல்வர் பெயரில் வெளிவரும் ட்வீட்டில் அதுபோன்று எழுத்துப்பிழைகள் இருக்க வாய்ப்பில்லை. அது தவிர, அந்த ட்விட்டர் ஐடியின் பெயர் @officeof_ops என்று உள்ளது. ஆனால், ஓபிஎஸ்-இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடி @OfficeOfOPS என்பது ஆகும்.

போலி ட்விட்டர் ஐடி


அதேபோல், @officeof_ops என்ற ஐடியில் இயங்கி வந்த ட்விட்டர் கணக்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் முடக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட ட்வீட் போலியானது என்று ஓபிஎஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உண்மை கண்டறியும் இணையதளமான factcresendo தெரிவித்துள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

FACT CHECK: பால் தினகரன் வீட்டில் கைபற்றப்பட்ட கட்டுக்கட்டான பணம்!

முடிவு

எனவே, சசிகலாவை வரவேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் ட்வீட் பதிவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி