ஆப்நகரம்

கொரோனா வைரஸா, பாக்டீரியா தொற்றா? - கிளம்பியது புதிய சர்ச்சை!

கொரோனா வைரசே அல்ல; அதுவொரு பாக்டீரியா தொற்று என, சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 12 Jun 2020, 10:06 pm
ஒட்டுமொத்த உலகத்தையே இன்று கொரோனா எனும் வைரஸ் உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை பல்வேறு நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil fact check


இந்த நிலையில், கொரோனா நுண்கிருமி வைரசே அல்ல; அதுவொரு பாக்டீரியா தொற்று என்றொரு தகவல் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.

'இதனை ஒருபுறம், உலக சுகாதார நிறுவனமே தெரிவித்துவிட்டு, மறுபுறம் கொரோனாவை வைரஸ் தொற்று எனக் கூறி, ஒட்டுமொத்த உலகையே ஏமாற்றி வருகிறது. கொரோனா தொற்றை ஒரே நாளில் குணப்படுத்திவிட முடியும்' என்று அந்த வீடியோ பதிவு விவரிக்கிறது.

FACT CHECK: Is Covid-19 a bacterial infection and not a virus?

இந்த வீடியோ பதிவின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் முதல்கட்டமாக, இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என ஆராயப்பட்டது.

அதில், " கோவிட் -19 எனப்படும் கொரோனா நிச்சயமாக ஓர் வைரஸ்தான் என்றும், இந்த தொற்றுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் கண்பிடிக்கப்படவில்லை. எனவேதான் இதற்கு தற்போது கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகும் ஒரு நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அவருக்கு கூடவே பாக்டீரியா தொற்றும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதன் காரணமாக, அந்த நபரின் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. இதனை தடுக்க, கொரோனாவுக்கான கூட்டு மருந்து சிகிச்சையுடன், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும் (ஆன்ட்டிபயாட்டிக்) நோயாளிக்கு தரப்பட வேண்டும்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவுறுத்தல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 'கொரோனா நுண்கிருமி வைரஸ் தான்; பாக்டீரியா அல்ல' என்று மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) இணையதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் அல்ல; பாக்டீரியா என்று சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கும் தகவல் முற்றிலும் தவறானது என உறுதியாகிறது.

அடுத்த செய்தி