ஆப்நகரம்

Fact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ?

வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக, சமூக வலைதளங்களில், அவ்வப்போது பகிரப்பட்டு வரும் தகவலின் நம்பத்தன்மை குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 19 Oct 2019, 12:31 am
கடந்த 2016 -ஆம் ஆண்டு, நவம்பர் 8 -ஆம் தேதியை, இந்தியர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
Samayam Tamil trn


ஆம்... அன்றைய தினம் தான், நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதற்கு மாற்றாக, புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு (டிமானிடேஷன்) நடவடிக்கையின் எதிர்மறை தாக்கங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று, கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக சமூக வலைதளங்களில் அவ்வபோது பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது, தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெறபோவதாகவும், இதற்கு மாற்றாக, 2020 -ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல், புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடவுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் அவ்வபோது பரப்பப்பட்டு பீதியை கிளப்பி வருகிறது.


இதுகுறித்து, தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னரும், பொருளாதார விவகாரங்கள் துறை முன்னாள் செயலருமான சக்திகாந்த தாஸ், தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அளித்திருந்த விளக்கத்தில், "புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும், 500 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வெளியிடுவதற்கு தான் முக்கியத்துவம் தரப்படும்" எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காந்தியின் உருவம் பொறித்த, அவரது கண்ணாடி பொறித்த என இரண்டு விதமான புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.

இவை தான், வரும் ஜனவரி 1-ஆம் தேதி, ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் என்ற கேப்ஷனுடன் இந்த தகவல் உலா வந்துக் கொண்டிருக்கிறது.


இதன் நம்பத்தன்மை குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, ஆர்பிஐ அதிகாரிகளிடம் பேசியதில், 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது குறித்து தாங்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லையென்றும், அவ்வாறு ஏதேனும் அதிகாரபூர்வமான அறிவிப்பாக இருந்தால், ஆர்பிஐ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

அத்துடன், சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கும் 1,000 ரூபாய் நோட்டு போன்ற பிம்பத்தின் வலது மேல்புறத்தில் "Artistic Imagination" என அச்சிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துக்கு பதிலாக, "MK Gandhi" என்றும், "Year 2017 India" எனவும் அச்சிடப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, புதிய 1000 ரூபாய் நோட்டை ஆர்பிஐ, வரும் ஜனவரி மாதம் வெளியிட போவதில்லை என்பதும், சமூக வலைதளங்களில் வலம் வரும் 1000 ரூபாய் போன்ற பிம்பம், வடிவமைக்கப்பட்ட ஒன்று என்பதும் உறுதியாகிறது.

அடுத்த செய்தி