ஆப்நகரம்

"என்னங்க நடக்குது".. 13 வயது சிறுமிக்கு திடீர் "ஹார்ட் அட்டாக்".. தெலங்கானாவில் 'ஷாக்'

தெலங்கானாவில் 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார்.

Samayam Tamil 2 Apr 2023, 2:13 pm
ஹைதராபாத்: தெலங்கானாவில் வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil telangana girl heart attack


இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இளம் வயது மாரடைப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும், பதின் பருவ சிறுவர் சிறுமிகள் கூட மாரடைப்புக்கு உயிரிழப்பது மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு மாரடைப்பு, கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு என்பன போன்ற செய்திகள் மிகச் சாதாரணமாக மாறிவிட்டன. ஏன் இப்படி திடீரென இளம்வயது மாரடைப்புகள் அதிகரித்து வருகின்றன எனத் தெரியாமல் மருத்துவ உலகமே விழிப்பிதுங்கி நிற்கிறது.

இந்நிலையில், தெலங்கானாவில் நேற்று நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் போடா ஸ்ரவந்தி. 13 வயது ஆகிறது.. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை ராமநவமி என்பதால் தெலங்கானாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சிறுமி ஸ்ரவந்தி தனது தோழிகளுடன் வீட்டுக்கு அருகே உள்ள மைதானத்தில் விளையாடி விட்டு வீடு திரும்பினார். பின்னர் வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் திடீரென எழுந்த ஸ்ரவந்தி, அருகே படுத்திருந்த தாத்தா பாட்டியிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

சிறுமிதானே.. ஏதேனும் வாயு பிடிப்பதாக இருக்கும் எனக் கூறி, அவரது பாட்டியும் சமையலறைக்கு சென்று இஞ்சி பூண்டை அரைத்து சிறுமிக்கு குடிக்க குடித்திருக்கிறார். இதையடுத்து, சிறுமிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன அவர்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து சிறுமியை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி பாதி வழியிலேயே மயங்கினார்.

பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து, மயங்கி கிடந்த சிறுமிக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி ஸ்ரவந்தி உயிரிழந்தார். மாரடைப்பால் சிறுமி உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் கடந்த சில மாதங்களாக இளைஞர்களும், சிறார்களும் மாரடைப்பால் உயிரிழந்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களில் மட்டும் 6 இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி