ஆப்நகரம்

காவல் ஆணையர் வீட்டில் எடுபிடி; காய்கறி வாங்கி, வீடு துடைக்கும் வேலையில் 18 காவலர்கள்!

காவல் ஆணையர் வீட்டில் 18 காவலர்கள் வீட்டு வேலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 3:22 pm
மாண்டியா: காவல் ஆணையர் வீட்டில் 18 காவலர்கள் வீட்டு வேலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Mandhya SP


கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காவல் ஆணையராக ஜி.ராதிகா பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் 18 காவலர்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, ஆர்டர்லி சிஸ்டத்தை ஒழித்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இருப்பினும் காவல் ஆணையர் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் காவல் அதிகாரிகள் தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, துணி துவைப்பது, குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள் உண்மையில்லை என்று காவல் ஆணையர் ராதிகா மறுத்துள்ளார். அவர்கள் தங்கள் மேலதிகாரிக்கு, தானாக முன்வந்து பணிவிடைகள் செய்கின்றனர். இது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான் என்று கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கிய ஆர்டர்லி முறை, கடந்த 2016ஆம் ஆண்டு, சித்தராமையா அரசால் நீக்கப்பட்டது. அந்த சமயத்தில் 3,000க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளின் வீடுகளில் பணிவிடைகள் செய்து வந்தனர். ஊடகங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஏ.எஸ்.ஐ தர அதிகாரிகள் உட்பட 18 காவல்துறையினர், மாண்டியாவில் உள்ள ஆணையர் வீட்டில் பணிவிடைகள் செய்து வருகின்றனர்.

அதில் மூன்று காவல்துறை ஓட்டுநர்கள், ஆணையரின் குடும்ப உறுப்பினர்களுக்காக வேலை செய்து வருகின்றனர். காவல் ஆணையர் ஜி.ராதிகா வீட்டில் சாதாரண உடையில், காவல்துறையினர் பணி செய்வது போன்ற பல்வேறு வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனை அங்கு வேலை செய்யும் காவல்துறையினரே எடுத்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மூத்த காவல்துறை அதிகாரி, காவல் ஆணையர் தனது வீட்டில் 3 காவல்துறையினரை மட்டுமே உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். ராதிகா, பெரிய தோட்டம் கொண்ட பிரிட்டிஷ் காலத்திய வீட்டில் வசித்து வருகிறார். இதுபோன்ற வீடுகளுக்கு தோட்டக்காரர்களையும், பிற ஊழியர்களையும் அரசே நிர்ணயிக்கிறது. ஆனால் 12க்கும் மேற்பட்ட காவல்துறையினரை பணிக்கு அமர்த்திக் கொண்டது ஏற்றுக் கொள்ள இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.

18 cops to water garden, wash clothes at Mandya SP's home.

அடுத்த செய்தி