ஆப்நகரம்

ஒரே மோட்டார் பைக்கில் 58 வீரர்கள் பயணித்து உலக சாதனை.!

பெங்களூருவில், 58 ராணுவ வீரர்கள், ஒரே மோட்டார் பைக்கில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

TNN 20 Nov 2017, 11:43 am
பெங்களூருவில், 58 ராணுவ வீரர்கள், ஒரே மோட்டார் பைக்கில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
Samayam Tamil 58 army men ride motorbike in bengaluru for world record
ஒரே மோட்டார் பைக்கில் 58 வீரர்கள் பயணித்து உலக சாதனை.!


சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏ.எஸ்.சி. பயிற்சி மையத்தில் உள்ள ‘டர்னடோஸ்’ குழுவில் இருக்கும் ராணுவ வீரர்கள் 54 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று உலக சாதனை படைத்தனர். அதன் பிறகு, ராணுவத்தின் ‘ஆர்மி சிக்னல் கார்ப்ஸ்’ குழுவினர் 56 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று, 2013-ம் ஆண்டு அவர்களின் சாதனையை முறியடித்தனர்.

மீண்டும் இவர்களின் சாதனையை முறியடிக்க ‘டர்னடோஸ்’ குழுவினர் முடிவு செய்தனர். இதனால் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான விமான தளத்தில் உலக சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.



500 சி.சி. கொண்ட பழமையான மோட்டார் சைக்கிளில் ‘டர்னடோஸ்’ குழுவை சேர்ந்த வீரர்கள் சாகச பயணத்தை தொடங்கினர். அப்போது வீரர்கள் தேசிய கொடியின் மூவர்ணங்களை குறிக்கும் விதமாக உடைகள் மற்றும் ஹெல்மெட்டுகள் அணிந்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ராணுவ வீரர் சுபீதார் ராம்பால் யாதவ் ஓட்டினார். தொடக்கத்தில் 30 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்க, அதை தொடர்ந்து ஓடும் மோட்டார் சைக்கிளில் தலா 2 வீரர்களாக அடுத்தடுத்து ஏறினர். இவ்வாறாக மொத்தம் 58 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்தனர். அவர்கள், 1.20 கிலோ மீட்டர் தொலைவை 2 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர்.

‘டர்னடோஸ்’ குழுவின் இந்த சாதனை ‘கின்னஸ்’, ‘லிம்கா’, ‘யூனிக்யூ’ புத்தகங்களில் இடம் பெற உள்ளது. இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தனர்.


இதுகுறித்து, மேஜர் பன்னி சர்மா கூறுகையில், ‘அடுத்தகட்டமாக 15 மோட்டார் சைக்கிள்களில் 300 வீரர்கள் கோபுரம் அமைத்து பயணம் செய்து சாதனை படைக்க திட்டமிட்டு இருக்கிறோம்’ என்று கூறினார்.

அடுத்த செய்தி