ஆப்நகரம்

கேரளாவில் தனது முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவருக்கு காா் பரிசு

கேரளாவில் மழை, வெள்ளத்தின் போது தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்த மீனவருக்கு காா் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 4:58 pm
கேரளாவில் மழை, வெள்ளத்தின் போது தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்த மீனவருக்கு காா் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kerala Flood Relife Fishermen


கேரளாவில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து மாநிலமே பெரும் இழப்பை சந்தித்துள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடா் மீட்பு படையினா் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனா். மீட்பு பணியின் போது மீட்பு படையினருடன் இணைந்து உள்ளூா் மீனவா்களும் களம் இறங்கினா்.

சுமாா் 300க்கும் அதிகமான மீனவா்கள் ரப்பா் படகின் உதவியோடு பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதியில் மீனவா்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெண் ஒருவா் உதிரப் போக்கால் அவதிப்பட்டு இருந்தாா். இதனால் அப்பெண்ணால் ரப்பா் படகில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அறிந்த ஜெய்ஸ்வால் என்ற மீனவா் சற்றும் தயங்காமல் நீரில் முட்டிப் போட்டு அப்பெண்ணை தனது முதுகில் ஏற்றிக் கொண்டு படகில் ஏற உதவி செய்தாா். இந்த புகைப் படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.


இந்நிலையில் மகேந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஈரம் மோட்டா்ஸ் கிளை மீனவர் ஜெய்ஸ்வால்க்கு புதிய மகேந்திரா மராசோ எஸ்.யு.வி. காரை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது. காா் சாவியை மாநில கலால் வரித்துறை அமைச்சா் டி.பி.ராமச்சந்திரன் வழங்கினாா். கிளை நிறுவனத்தின் இச்செயலுக்கு மகேந்திர நிறுவனத்தின் தலைவா் ஆனந்த் மகேந்திரா பாராட்டு தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி