ஆப்நகரம்

நீதிமன்றத்துக்கு சென்றது பாஜக; பிழைக்குமா கமல்நாத் ஆட்சி?

மத்தியப்பிரதேச அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை.

Samayam Tamil 16 Mar 2020, 2:09 pm
மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காண்பித்து, அவையை வரும் 26ஆம் தேதி வரை சபாநாயகர் பிரஜாபதி ஒத்தி வைத்தார்.
Samayam Tamil குழப்பத்தில் மத்தியப்பிரதேசம்


இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக இன்று வழக்கு தொடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் உள்பட பத்து எம்.எல்.ஏ.,க்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். அதில், 12 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து பாஜக தலைவர்கள் ஆளுநர் வீட்டுக்கு சென்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த வாரம் 22 எம்.எல்.ஏ,க்கள் ராஜினாமா செய்தனர். இவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. பாஜகவுக்கு தாவிய சிந்தியாவுக்கு மாநிலங்களை உறுப்பினர் பதவியை பாஜக பரிசாக வழங்கியது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது. இவர்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.
காணாமல் போகிறதா காங்கிரஸ்? ம.பி.யை அடுத்து குஜராத் - விடாமல் துரத்தும் சோகம்!
இதற்கிடையே, தங்களது எம்.எல்.ஏ,க்களை சிறை வைத்து இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முதல்வர் கமல் நாத் ஆளுநரிடம் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால், இன்று சட்டமன்றத்தில் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கடந்த வாரம் முதல்வரை ஆளுநர் லால்ஜி டாண்டன் கேட்டுக் கொண்டார்.

ஆறு பேரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், 230 பேர் கொண்ட அவையின் பலம் தற்போது 222ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 112 பேரின் ஆதரவு இருக்க வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் இறந்து விட்டதால், அந்த இடங்கள் காலியாக உள்ளன.
பறிபோகிறதா காங்கிரஸ் ஆட்சி? ம.பி அரசியல் ஆட்டத்தின் கிளைமேக்ஸ்!
22 எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறிய பின்னர் காங்கிரஸ் பலம் தற்போது 92ஆக உள்ளது. முன்பு 114 ஆக இருந்தது. இவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருவர், சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ., ஒருவரை சேர்த்தால் காங்கிரஸ் பலம் 95 ஆகும். மீதமுள்ளவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால் அவையின் பலம் 206 ஆக குறையும். ஆட்சி அமைக்க 104 பேரின் ஆதரவு தேவை. இதை பாஜக வைத்துக் கொண்டுள்ளது. தற்போது பாஜகவிடம் 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ராஜினாமா ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் 16 எம்.எல்.ஏ.,களும் பாஜகவில் இணைகிறார்களா என்பது தெரிய வரும். அவ்வாறு சேரும்பட்சத்தில் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது.

அடுத்த செய்தி