ஆப்நகரம்

நிறவெறியால் ராகிங் கொடுமைக்கு ஆளான கேரள மாணவி

கர்நாடகாவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவியை, நிறத்தை காரணம் காட்டி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 22 Jun 2016, 3:26 pm
கோழிக்கோடு: கர்நாடகாவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவியை, நிறத்தை காரணம் காட்டி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil abused because of dark complexion kerala ragging victim
நிறவெறியால் ராகிங் கொடுமைக்கு ஆளான கேரள மாணவி


கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள எடப்பல்லைச் சேர்ந்த தலித் மாணவி அஸ்வதி. இவர் கர்நாடக மாநிலம் கலபுரகியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான அல் கோமர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 9ம் தேதி, அக்கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவிகள், அஸ்வதியை கருப்பு நிறமாக இருப்பதாக கூறி கிண்டல் செய்துள்ளனர். மேலும் கழிவறைக்கு பயன்படுத்தும் வேதிப் பொருளை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற மாணவிகள், உடனடியாக அஸ்வதியை மீட்டு, அருகிலுள்ள பசவேஷ்வரா மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அஸ்வதி பேச இயலாத நிலையில் இருந்ததால், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து மே 15ம் தேதி, அஸ்வதியை மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறும், இச்சம்பவத்திற்கு காரணமான சீனியர்கள் அதிரா மற்றும் லட்சுமி ஆகியோரை பற்றி எந்தவித தகவலும் தெரிவிக்கக் கூடாது என்றும் மற்ற சீனியர் மாணவிகள் கூறியுள்ளனர்.

ஆனால் நர்சிங் கல்லூரியின் நிர்வாகி பைய்க், இதுபோன்று எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளனர். மாணவி அஸ்வதி தாமாகவே வேதிப் பொருளை உட்கொண்டதாகவும், தகவலறிந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் மாணவி அஸ்வதி உயிருக்கு ஆபத்தான நிலையில், கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், அவரை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் பசவேஷ்வரா மருத்துவமனை மேற்பார்வையாளர் சோமன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மாணவி அஸ்வதியிடம் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு, மருத்துவக்கல்லூரி பகுதியின் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோழிக்கோடு உதவி காவல்துறை ஆணையர் சலி உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கருப்பு நிறமாக இருப்பதாக கூறி, சீனியர்கள் தன்னை கிண்டல் செய்ததாகவும், கழிவறைக்கு பயன்படுத்தும் வேதிப் பொருளை உட்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் விடுதியில் இருக்கும் போது சமைக்கவும், பெற்றோருடன் தொலைபேசியில் பேசவும் சீனியர் மாணவிகள் மறுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தன்னால் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியவில்லை என்றும், இதுகுறித்து தங்களது வழக்கறிஞரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் மாணவி அஸ்வினி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவக் கல்லூரி பகுதியின் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, துணை காவல்துறை ஆணையர் சலி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி