ஆப்நகரம்

Cochin Airport: 15 நாட்களுக்கு பிறகு கொச்சி விமான நிலையம் இன்று திறப்பு!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக கடந்த 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது.

Samayam Tamil 29 Aug 2018, 2:31 pm
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக கடந்த 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது.
Samayam Tamil download (12)
15 நாட்களுக்கு பிறகு கொச்சி விமான நிலையம் இன்று திறப்பு!


கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350க்கும் மேல் உயர்ந்துள்ளது.

இதனிடையே இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் தண்ணீர் தேங்கியதால் கொச்சி விமான நிலையம் கடந்த 15 நாட்களாக மூடப்பட்டிருந்தது. கொச்சி வரும் விமானங்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோயமுத்தூர் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி முதல் வர்த்தக விமானங்கள் மட்டும் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் கொச்சி விமான நிலையத்திற்கு ரூ.220 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே மழை குறைந்து வெள்ள நீர் குறைந்ததைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம், இன்று திறக்கப்பட்டு உள்ளது.

ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் இன்று முதல் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளன. அதன் முதல்கட்டமாக மும்பையில் இருந்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமானம், கொச்சி விமான நிலையத்தில் இன்று பிற்பகலில் தரையிறங்க இருக்கிறது.

இதனிடையே வெள்ளம் காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட தேதியில் விமான சேவை இல்லாமல் இருந்ததால், அந்த டிக்கெட்களை செப்டம்பர் 15-ம் தேதி வரை மாற்றி அமைக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி