ஆப்நகரம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு திடீர் தடை; பின்னணி என்ன?

பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Sep 2020, 12:32 pm
கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை தங்கள் நாட்டிற்கு வருகை புரியும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகடிவ் மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் வர வேண்டாம். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் செய்த கொரோனா பரிசோதனை சான்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் பயணத்தை அளித்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து துபாய் சென்றுள்ளது. அதில் கொரோனா நோய்த் தொற்றுடன் ஒருவர் பயணித்துள்ளார். அதாவது விமானப் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
Samayam Tamil Air India Express


இதன் முடிவுகளில் பாசிடிவ் என்று வந்துள்ளது.இதுபற்றி தகவலறிந்த துபாய் விமானப் போக்குவரத்து துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு தடை விதித்துள்ளது. இது இன்று முதல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணம் இனி இப்படித்தான்; அரசின் முடிவால் அதிர்ந்து போன பயணிகள்!

மேலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான நபரால் சம்பந்தப்பட்ட விமானத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட செலவு, வேறு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அல்லது இதனுடன் தொடர்புடைய இதர செலவுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் விமானச் சேவை தொடங்குகிறது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ள துபாய் விமானப் போக்குவரத்து துறை, செப்டம்பர் 2ஆம் தேதி கோவிட்-19 பாதிப்புடன் பயணி ஒருவர் வருகை புரிந்தது தொடர்பாக சுட்டிக் காட்டியிருந்தோம்.

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி; இனிமே டிக்கெட் விலை தாறுமாறு? அதுவும் இங்கெல்லாம்!

இதனால் சக பயணிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இரண்டாவது முறை இவ்வாறு கொரோனா நோய்த்தொற்றுடன் ஒருவர் பயணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது விமானப் போக்குவரத்து தொடர்பான விதிமீறல். இதனால் 15 நாட்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி