ஆப்நகரம்

அரசியல் பரபரப்பு- ஒட்டுமொத்த காங்கிரஸும் ராஜினாமா; என்ன நடக்குது கர்நாடகாவில்?

கர்நாடக அரசியலில் நீடித்து வரும் பரபரப்பான சூழலை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Samayam Tamil 8 Jul 2019, 2:20 pm
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. எனவே அதிக தொகுதிகளை கைப்பற்றிய பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
Samayam Tamil Siddaramaiah


இந்த சூழலில் கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின.

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேர் இரு கட்சிகளில் இருந்து திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி உள்ளனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும் சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் தற்போது பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தி, அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும் வகையில், காங்கிரஸின் 21 அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் அமைச்சர்கள் தாமாக முன்வந்து பதவியை விட்டுக் கொடுத்துள்ளனர்.

தற்போது காங்கிரஸ், பாஜக கட்சிகள் 105 என்ற சம எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளனர். எனவே அடுத்தக்கட்டமாக என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அடுத்த செய்தி