ஆப்நகரம்

ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடியை பற்றி ராகுல் கிண்டல்

தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டி.ஆர்.டி.ஓ. மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பிரதமர் மோடிக்கு உலக திரையரங்குகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்!

Samayam Tamil 27 Mar 2019, 4:52 pm
ASAT ஏவுகணை சோதனை வெற்றியை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
Samayam Tamil modirahul_660x450_032319035508


அந்நிய நாட்டு செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ASAT ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். மிஷன் சக்தி (Mission Shakti) திட்டத்தின் கீழ் ஒரிசா கடற்கரையில் உள்ள அம்துல் கலாம் தீவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வளிமண்டல கீழ் அடுக்கில் 300 கி.மீ. தொலைவு வரை இந்திய வான் எல்லையில் நுழையும் அந்நிய நாட்டு உளவு செயற்கைக்கோள்களை மூன்றே நிமிடங்களில் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்திருப்பதை அறிவித்த பிரதமர் மோடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் இன்று நாட்டு மக்களுக்கு முக்கியமான செய்தியைக் கூறப்போவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பின், பகல் 12.26 மணி முதல் சுமார் 15 நிமிடங்கள் ASAT சோதனை வெற்றி பெற்றது பற்றி உரையாற்றினார்.

இந்த ஏவுகணை சோதனை வெற்றிக்காக டி.ஆர்.டி.ஓ. மற்றும் இஸ்ரோவுக்கு தலைவர்களும் பிரபலங்களும் பொதுமக்களும் வாழ்த்து கூறிவருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டி.ஆர்.டி.ஓ. மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பிரதமர் மோடிக்கு உலக திரையரங்குகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்!

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஏவுகணை சோதனை வெற்றிக்கு வாழ்த்து கூறினர்.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் ஆதாயம் பெறும் நோக்குடன் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

அடுத்த செய்தி