ஆப்நகரம்

Atal Bihari Vajpayee: வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை!

வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அரசியல் தலைவர்கள் நேரில் நலம் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 16 Aug 2018, 11:13 am
டெல்லி: வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அரசியல் தலைவர்கள் நேரில் நலம் விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil Vajpayee


இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலிருந்து ஓய்வு பெற்றார். அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சிறுநீரக தொற்று நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவரது உடல்நலம் குறித்து பிரதமர் அலுவலகம் தொடர்ந்து விசாரித்து வருகிறது. அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் அவரது உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக, ஓரளவு உடல்நிலை சீராக இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அவருக்குத் தற்போது உயிர் காக்கும் உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று, வாஜ்பாய் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அவரது மகள் பிரதிபா அத்வானி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று, வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.

குவாலியரில் வாஜ்பாய் உடல்நலம் பெற்று, மீண்டு வர அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து, பிரார்த்தனை செய்தனர்.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.


இந்நிலையில் இன்று பிற்பகல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் எய்ம்ஸ் சென்று வாஜ்பாய் உடல்நலம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முன்னதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, எய்ம்ஸ் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Atal Bihari Vajpayee admitted in aiims on life support.

அடுத்த செய்தி