ஆப்நகரம்

முன்கூட்டியே சட்டப்பேரவை கலைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை

சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன் கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 2:01 pm
மாநில அரசு சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன் கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டுவருவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
Samayam Tamil eci-1516543077


சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சிகள் எம்.எல்.ஏ.கள் ஆதரவின் பெரும்பான்மை அடிப்படையில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தான் ஆளும் பல மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்த மாநிலங்க்களின் சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்தும் வகையில் முயற்சித்து வருகிறது.

இதற்காக பாஜக ஆளும் சில மாநில சட்டப்பேரவைகள் 5 ஆண்டு ஆயுட்காலத்தை பூர்த்தி செய்யும் முன்பே கலைக்க முயற்சி நடக்கிறது. இதேபோல, தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதலும் கிடைத்ததால் தற்போது அங்கு காபந்து அரசின் முதல்வராக சந்திரசேகர் ராவ் இருக்கிறார். அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு இருக்கும்போதே ஆட்சி கலைப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்து தெலங்கானா மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் மாநில அரசுகள் உரிய காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டுவருவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசுகள் மக்களுக்கு எந்த புது அறிவிப்பையோ, திட்டங்களையோ அறிவிக்கவோ, செயல்படுத்தவோ இயலாது.

முன்கூட்டிய அரசு கலைக்கப்படும்போது அடுத்த தேர்தலில் மக்களுக்கு பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து பிரச்சாரம் செய்ய கட்சிகள் முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் நினைக்கிறது. எனவே, உரிய காலத்திற்கு முன் அரசைக் கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வரலாம் என்பதை பரிசிலீக்கிறது.

இதன்மூலம் ஆட்சி கலைக்கப்பட்டதும் கட்சிகள் எந்த வாக்குறுதிகளையும் அறிவிக்க முடியாது என்பதால் அரசுகள் முன்கூட்டியே ஆட்சியைக் கலைப்பதைத் தவிர்க்கும் என தேர்தல் ஆணையம் கருதுகிறது.

அடுத்த செய்தி