ஆப்நகரம்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; தயார் நிலையில் இந்தியா - எல்லையில் போர் பதற்றம்!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Feb 2019, 7:53 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14ஆம் தேதி, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Samayam Tamil Pakistan Attack


இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதில் இரு தமிழக வீரர்களும் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

இதற்கு இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்று பிரதமர் மோடி அனுமதி வழங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப் படையில் மிராஜ் 2000 ரகத்தைச் சேர்ந்த 12 போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

அப்போது பாகிஸ்தானின் எஃப்16 ரக போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மிராஜ் ரக போர் விமானங்களின் அணிவகுப்பைப் பார்த்து பின்வாங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் பதிலடி தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜௌரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோல் அக்னூர் பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இன்று மாலை 5.30 மணியளவில் கிருஷ்ணா காட்டி பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால், இருநாடுகளிடையே போர் ஏற்படுமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி