ஆப்நகரம்

சினிமா, டிவி தொடர் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி; வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு!

சினிமா படப்பிடிப்புகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 23 Aug 2020, 11:49 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சினிமா, டிவி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும், டிவி சீரியல்களும் பாதியில் நின்றன. பல கோடி ரூபாய் பணம் முடங்கியது. சினிமா துறை பெரிய அளவில் பாதிப்பைக் கண்டது. வருமானமின்றி பலரும் அவதிப்பட்டு வந்தனர்.
Samayam Tamil Prakash Javadekar


சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு உரிய சுகாதார ஏற்பாடுகளுடன் படப்பிடிப்புகள் நடத்த சில மாநில அரசுகள் அனுமதித்தன. இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சினிமா, டிவி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இனி படப்பிடிப்புகள் நடத்தலாம். இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஹேப்பி நியூஸ் மக்களே - முற்றிலும் ரத்தானது இ-பாஸ்!

* நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆளாகக் கூடியவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

* பணிபுரியும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

* படப்பிடிப்பிற்கு இடையே அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்

* ஆரோக்கிய சேது ஆப் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

* படப்பிடிப்புகளுக்கு வரும் போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு அனுமதிக்க வேண்டும்.

* அனைத்து நேரங்களிலும் பிறரிடம் இருந்து 6 அடி இடைவெளி விட்டு பணியாற்ற வேண்டும்.

* இருக்கை வசதிகளும் போதிய சரீர இடைவெளியுடன் அமைக்க வேண்டும்.

* யாருக்காவது தொற்று ஏற்பட்டால் உடனே படப்பிடிப்பு தளம் முழுவதையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

* அறிகுறிகள் தென்பட்டால் தற்காலிகமாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* கேமரா முன்பு நடிக்கும் நபர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

* குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

* படப்பிடிப்பு தளத்தில் யாரும் எச்சில் துப்பக்கூடாது.

* மேக் அப், சிகை அலங்கார நிபுணர்கள் முக ஷீல்டுகளை அணிந்து கொள்ள வேண்டும்.

* படப்பிடிப்பு தளத்திற்கு பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது.

* வெளிப்புற படப்பிடிப்புகளின் போது உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் முறையாக நடத்த வேண்டும்.

அடுத்த செய்தி