ஆப்நகரம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா; ஆளும் அரசிற்கு ஆபத்து!

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் திடீரென பதவி விலகியுள்ளதால், ஆளும் குமாரசாமி அரசிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 4:03 pm
கர்நாடக மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஆனால் அமைச்சரவை ஒதுக்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
Samayam Tamil Anand Singh


இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மாறினர். அவர்களில் ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்டோர் அடங்குவர். அவர்களை எப்படியாவது தங்கள் வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பாஜக மும்முரம் காட்டி வருகிறது.

அவ்வாறு எம்.எல்.ஏக்கள் அணி மாறினால், ஆளும் கூட்டணிக்கு ஆபத்து ஏற்படும். கர்நாடகாவில் ஆட்சி கவிழவும் வாய்ப்பு உண்டாகும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவருக்கு அமைச்சர் பதவி அளித்து, குமாரசாமி தற்காலிக தீர்வு கண்டார்.

இந்த சூழலில் விஜய் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்தார். ஆனால் அவர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக பாஜகவில் இருந்த ஆனந்த் சிங், பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். இதனால் மீண்டும் பாஜகவில் சேருவாரோ என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

ஆனால் அடுத்தடுத்து 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வர் என்று அதிரடியாக அறிவித்தார். ஆனந்த் சிங் ராஜினாமா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் கூறுகையில், இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை நேரில் சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி