ஆப்நகரம்

என் நெஞ்சை பிளந்தால் மோடி இருப்பார்: சிராக் பஸ்வான் பக்தி!

என் இதயத்தை வெட்டி பார்த்தால் அதில் பிரதமர் மோடி இருப்பார். நான் அவரின் தீவிர பக்தன் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 16 Oct 2020, 10:15 pm
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி, பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. அதற்கு காரணமாக, கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். கூட்டணியில் அதிக தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் அறிவித்தார். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை மட்டுமே எதிர்ப்பதாகவும், பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

சிராக் பஸ்வானின் இந்த நிலைப்பாடு அரசியல் அரங்கில் விநோதமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்போம் என்றும் சிராக் பஸ்வான் தெரிவித்து வருகிறார். மேலும், வாக்குகளை பெறுவதற்காக பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

நெருங்கும் தேர்தல்: சூறாவளி பிரச்சாரத்துக்கு ரெடியான மோடி

அதேசமயம், பிரதமர் மோடியின் புகைப்படங்களை லேக் ஜனசக்தி கட்சி உபயோகப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், பிரதமரின் படங்களை லோக் ஜனசக்தி கட்சி உபயோகிப்பதாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக தலைவர்கள் பலரும் சிராக் பஸ்வானை விமர்சித்து வருகின்றனர். பிரதமரை ராமர் என்றும் அவரது பக்தன் சிராக் பஸ்வான் ஹனுமான் என்றும் போஸ்டர் வைக்கப்படுவதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நிதிஷ்குமாரை சிராக் பஸ்வான் தொடர்ந்து விமர்சிப்பதையும் பாஜக தலைவர்கள் விரும்பவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நிதிஷ்குமாருக்கு வேண்டுமானால் தோல்வி பயம் காரணமாக பிரதமர் மோடியின் புகைப்படங்கள் தேவைப்படலாம். ஆனால், அவரது புகைப்படங்கள் எனக்கு தேவையில்லை. பிரதமர் மோடி எனது இதயத்தில் இருக்கிறார் என்று சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

மேலும், ராமருக்கான அனுமனின் பக்தியை போல எனது இதயத்தை இரண்டாக வெட்டி திறந்தால் அதில் பிரதமர் மோடி மட்டுமே இருப்பார். மோடி மீது அளவு கடந்த பக்தி வைத்துள்ளேன். ராமருக்கான ஹனுமான் போல பிரதமருக்கான ஹனுமானாக நான் இருப்பேன். தேவைப்பட்டால் எனது இதயத்தை திறந்து காட்டவும் தயாராக இருக்கிறேன் என்றும் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி