ஆப்நகரம்

அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் மூணாறு நிலச்சரிவு - தமிழர்களுக்கு நீங்கா துயரம்!

இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 12 Aug 2020, 12:24 pm
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமடி என்ற இடத்தில் உள்ள கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட்டில் ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அந்த எஸ்டேட்டில் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புகளில் தங்கியிருந்தனர். இந்த சூழலில் கடந்த வியாழன் அன்று இரவு கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
Samayam Tamil Munnar Landslide News


இதில் சிறுமிகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். மொத்தமிருந்த 25 வீடுகளில் வசித்து வந்த 80க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசியப் பேரிடர் மீட்புப் படை, கேரள வனத்துறை, போலீசார், தீயணைப்புத்துறையினர் கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இந்த ரேகா நம்பியார்? மூணாறு மீட்புப்பணியில் முதல் ஆளாய் நிற்கும் பெண்ணின் பின்னணி!

இதில் 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவற்றில் அருகிலுள்ள ஆற்றில் இருந்த மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் அடங்கும். இதற்கிடையில் மேலும் பலரது உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இருப்பினும் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மேலும் மூன்று பேரின் உடல்கள் கிடைத்துள்ளதால் பலி எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி தகவலறிந்து தொழிலாளர்களின் உறவினர்கள் தமிழகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். மூணாறு நிலச்சரிவு ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி