ஆப்நகரம்

இந்த போலீசுக்கு ஒரு சல்யூட் அடிங்க: அப்படி என்ன செய்து வருகிறார் தெரியுமா?

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாடம் எடுத்து வருவது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது

Samayam Tamil 18 Oct 2020, 6:12 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாணவர்களிடம் இந்த வசதி இல்லாததால் அவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Samayam Tamil delhi policeman teaches poor children infornt of temple
இந்த போலீசுக்கு ஒரு சல்யூட் அடிங்க: அப்படி என்ன செய்து வருகிறார் தெரியுமா?



ஆன்லைன் வகுப்பு

செல்போன் இல்லாத பல மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துடன் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்துள்ள நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பல பெற்றோர்களால் தங்களது குழந்தைகளுக்கு செல்போன்கள் வாங்கித் தர இயலவில்லை.

ஏழை, எளிய மாணவர்களுக்கு பாடம்

இந்த நிலையில், செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஏழை, எளிய மாணவர்களுக்கு டெல்லியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் டெல்லி செங்கோட்டை அருகே கோயில் வாசலில் வைத்து பாடங்களை எடுத்து வருகிறார். அவரது இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

ஒரு சல்யூட்

இதுகுறித்து போலீஸ் கான்ஸ்டபிள் தான்சிங் கூறுகையில், “கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பிருந்தே பள்ளி மாணவ மாணவியருக்கு பாடங்களை எடுத்து வருகிறேன். கொரோனா பொது முடக்கத்தின் போது, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடங்களை எடுக்க வில்லை. ஆனால், தற்போது ஆன்லைன் வகுப்புகளில் செல்போன் இல்லாத மாணவர்கள் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துள்ளேன். இதனால், கெட்ட நண்பர்களின் சேர்க்கை, குற்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் அவர்கள் சிக்காமல் இருப்பார்கள். சானிட்டைசர்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவைகள் மாணவர்களுக்கு வழங்கியுள்ளேன். சரீர விலகலை கடைபிடித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

சாக்கடை அள்ளிய மாணவர்

முன்னதாக, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மன உளைச்சலால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்காக செல்போன் வாங்க, சாக்கடை கழிவு அகற்றும் பணி செய்து வந்த சென்னை மாணவர் ஒருவரது நிலைமை கண் கலங்க வைத்தது. இந்த நிலையில், சமூக அக்கறையுடன் ஏழை, எளிய மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வரும் காவலருக்கு அனைவரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி