ஆப்நகரம்

சலசலப்பு, தள்ளுமுள்ளு; 2 எம்.பிக்களுக்கு சரியான அடி - லோக் சபாவில் பரபரப்பு!

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 2 Mar 2020, 7:54 pm
மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் முன்பு கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்ததால் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் லோக் சபா ஒத்திவைக்கப்பட்டது.
Samayam Tamil Lok Sabha


பிற்பகல் 2 மணியளவில் அவை கூடியதும் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் பதாகைகள் உடன் கோஷங்கள் எழுப்பினர். இதைக் கண்ட பாஜக எம்.பிக்கள் ஆவேசமாக காங்கிரஸ் உறுப்பினர்களை நோக்கி வந்தனர்.

அப்போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அவை பிற்பகல் 3 மணிக்கும், பின்னர் 4 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இதுபற்றி பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் வருத்தமளிக்கிறது.

அவை மாண்பு கெடாமல் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். இப்படியொரு சூழலில் அவையை நடத்த நான் விரும்பவில்லை. மூத்த தலைவர்கள் அவை சுமூகமாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதுக்குனு எல்லா நாளுமா? எங்கே அந்த 95 எம்.பிக்கள்?- ஷாக்கான வெங்கையா நாயுடு!

அவையில் நடந்தவை பற்றி பேசிய பாஜக தலைமைக் கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால், நான் பேசுவதை தடுப்பதற்காக எனது இருக்கையை நோக்கி காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்தனர். அவர்கள் பேனர்களை முன்னால் நீட்டினர்.

அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றவே பாஜகவினர் திரண்டு வந்தனர். அப்போது அவர்களை காங்கிரஸ் கட்சியினர் தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் பாஜக பெண் எம்.பி ஜாஸ்கவுர் மீனா தன்னை தாக்கியதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பி ரம்யா ஹரிதாஸ் புகார் அளித்துள்ளார்.

இதற்கு மீனா மறுப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியினர் மீது மீனா புகார் அளித்துள்ளார். மேலும் சபாநாயகர் பிர்லாவை சில பாஜக பெண் எம்.பிக்கள் நேரில் சந்தித்தனர். அப்போது தங்கள் கட்சி எம்.பிக்களான மீனா மற்றும் ஷோபா ஆகியோரை காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி