ஆப்நகரம்

என்னது இலவச தரிசனம் ரத்தா; என்ன ஆச்சு? - திருப்பதியில் பரபரப்பு!

இலவச தரிசன டோக்கன்கள் வாங்க பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் தேவஸ்தான நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Samayam Tamil 1 Nov 2020, 10:14 am
திருப்பதி திருமலை கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கிற்கு பிறகு கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த மாத இறுதியில் இருந்து ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் நாள்தோறும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வழங்கப்படுகிறது.
Samayam Tamil Tirupati Temple


ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் டோக்கன்கள் முழுவதும் தீரவில்லை எனில் கூடுதல் நேரம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் முதல்நாள் இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். அடுத்த நாள் காலை சில மணி நேரங்களிலேயே டோக்கன்கள் தீர்ந்து விடுகின்றன. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சூழலில் நேற்று அதிகாலை பூதேவி காம்ப்ளக்ஸில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.

அப்போது திடீரென இலவச டோக்கன்கள் விநியோகித்து முடித்து விட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கோபமடைந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இலவச டோக்கன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா?

இதுபற்றி திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், இலவச டோக்கன் வழங்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள், முதியவர்களை அழைத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக இலவச டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம் பக்தர்கள் அதிகளவில் திரண்டு கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டு நேரிடும். எனவே இலவச டோக்கன்களை ஆன்லைன் வாயிலாக வழங்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம். மேலும் டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி