ஆப்நகரம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழு ஆதரவு: அமித்ஷா உறுதி!

நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான முழு ஆதரவும் அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

Samayam Tamil 28 Mar 2020, 7:30 pm
கொரோனா வைரஸ் கொள்ளை நோயை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
Samayam Tamil புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழு ஆதரவு அமித்ஷா உறுதி


கொரோனா வைரஸ் (கோவிட்-19) கொள்ளையை நோயை தடுப்பதற்கு நாட்டின் தயார்நிலை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மார்ச் 28) ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான முழு ஆதரவையும் மத்திய அரசு அளிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இச்சூழலில் சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களுக்கு வேலைதேடி வரும் தொழிலாளர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்து உதவும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரண முகாம்கள் இருக்கும் இடம், அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம், மாநில அரசுகள் எடுத்துள்ள இதர நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்வுகள், பொது உரைகள், தொழில்நுட்பம், சேவையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்யவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நெடுஞ்சாலைகள் வழியாக பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக நெடுஞ்சாலையோரங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை அவர்கள் தங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டுமெனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரீர விலகல் விதிமுறைகளுக்கு ஏற்ப முகாம்கள் அமைக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோய் அறிகுறி கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கூறிய நிவாரண நடவடிக்கைகளுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து பணத்தை செலவிடும்படி உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி