ஆப்நகரம்

ஊரடங்கு எப்போது, எப்படி தளர்த்தப்படும்; மத்திய அரசின் செயல்திட்டம் இதுதான்?

நாடு முழுவதும் அமலில் இருக்கும் 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த பிறகு எவ்வாறு தடை உத்தரவுகள் தளர்த்தப்படும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 7 Apr 2020, 9:14 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil இந்தியாவில் ஊரடங்கு


இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஊரடங்கு முடிவடைந்த பிறகு, அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படுமா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தளர்த்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நிதி ஆயோக் குழுவினர் ’அவசரகால மருத்துவ மேலாண்மை திட்டம்’ ஒன்றை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளனர். அதில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், மாவட்டங்களில் தொடர்ந்து 28 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும்.

சமூகத் தொற்றாகும் கொரோனா? இங்கெல்லாம் கூடுதல் கவனம் தேவை- எச்சரிக்கை ரிப்போர்ட்!

மற்ற பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நான்கு விதமான படிநிலைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. அதன்படி,

நிலை ஒன்று - கடைசி 7 நாட்களில் 5 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பும், புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும்.

நிலை இரண்டு - கடைசி 7 நாட்களில் 20 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் வைரஸ் பாதிப்பும், புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும்.

நிலை மூன்று - 20 அல்லது அதைவிட அதிகமாக அதேசமயம் 50க்கும் குறைவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்க வேண்டும்.

நிலை நான்கு - 50 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வேண்டும்.

மேற்கூறியபடி இருந்தால் நிலை ஒன்றிற்கு முதலில் ஊரடங்கு தளர்த்தப்படும். அதன்பிறகு படிப்படியாக பிற நிலைகளுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும். ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.

இன்னும் ஒருவார காலம் இருப்பதால் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு நிலவரம் என்ன தெரியுமா?

நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை, சுகாதாரத்துறை அமைச்சகம், பயோடெக்னாலஜி துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுடன் நிதி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வது தொடர்பான செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி