ஆப்நகரம்

இன்று 2வது நாளாக டிகே சிவகுமாரிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி!!

விசாரணையில் இருந்து நான் எங்கும் தப்பி ஓடி விடமாட்டேன் என்று நேற்று அமலாக்கத்துறை முன்பு சட்ட விரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் சம்மன் பெற்று ஆஜரான கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Aug 2019, 11:34 am
காங்கிரஸ் மூத்த தலைவர் இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். முதல் நாளான நேற்று மாலை 6 மணி முதல் 11.30 மணி வரை ஆஜராகி பதில் அளித்தார். சுமார் 5.30 மணி நேரம் கேள்விகள் கேட்டனர்.
Samayam Tamil DK 3


சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமாருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்தது.

இவரது மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் புதிய சம்மன் சிவகுமாருக்கு அமலாக்கத்துறை நேற்றுமுன் தினம் இரவு அனுப்பியது.

இதையடுத்து அவர் நேற்று டெல்லி சென்று கான் மார்க்கெட் பகுதியில் இருக்கும் அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆஜரானார். இவரிடம் 6 மணிக்குத் துவங்கி தொடர்ந்து இரவு 11.30 வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நான் யாரையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: டிகே சிவகுமார்!!

செய்தியாளர்களிடம் இவர் பேசுகையில், ''நான் சட்டத்திற்கு கட்டுப்பட்டவன். எனக்கும் சட்ட வாய்ப்புகள் உள்ளன. அதுகுறித்து விசாரித்து வருகிறேன். இந்த வழக்கை அரசியல், சமூக, சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். நான் எங்கும் தப்பி ஓடி விடமாட்டேன்'' என்றார்.

குஜராத் மாநிலத்தில் 2017ல் மாநிலங்களவை தேர்தல் நடந்தபோது, 40 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்தனர். இதையறிந்த சிவகுமார், சுதாரித்துக் கொண்டு, குஜராத் சென்று, அந்த 40 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை கர்நாடகா மாநிலத்திற்கு அழைத்து வந்தார். இதையடுத்தே தன்னுடைய வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி